உயர்தரத்திற்குரிய கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடங்களுக்கு மாத்திரமல்லாமல் 11ம் வகுப்புக்கு கீழான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்குமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவி வருகின்றது. இத்தட்டுப்பாடு தமிழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் மலையக மாவட்டங்களான நுவரேலியா, இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, கேகாலை, மாத்தறை ஆகியவற்றிலும், கிழக்கு மாகாண மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றிலும், வட மாகாணத்தில் யாழ் மாவட்டம் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களிலும் பெரியளவில் காணப்படுகின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பல பாடசாலைகள் உயர்தர பௌதிக விஞ்ஞான, உயிரியல் விஞ்ஞான பாட நெறிகளை நிறுத்தி வருவதே இதற்கு காரணமாகவும்.
ஸ்டெம் கல்வி நிறுவனம் இவ்வாசிரியர் பற்றாக்குறையை எண்ணிம தொழில்நுட்பங்களைப்பாவித்து தீர்க்க முயற்சித்து வருகின்றது.
மலையக மாவட்டங்களான இரத்தினபுரி, மொனராகலை , பதுளை, கேகாலை போன்ற மாவட்டங்களில் தமிழ் மாணவர்கள் விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகம் செல்லாது விடத்து அவ்விடங்கள் சிங்கள மாணவர்களுக்கே கிடைக்கும். இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பெரும்பான்மை அதிகாரிகள் இப்பிரதேசங்களில் தமிழ் விஞ்ஞான பிரிவு பாடசாலைகள் உருவாவதை விரும்புவதில்லை என்பது இந்நிலைக்கு இன்னொரு பிரதான காரணமாகும்.
பொதுவாக விஞ்ஞான பிரிவு என்றாலே கூடுதல் செலவாகும், போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற பயத்தால் தகுதியான மாணவர்கள் பலர் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்வதில்லை.
பல மாணவர்கள் நிகழ்நிலையில் பிரபல ஆசிரியர்களிடம் கற்று வருகின்றனராயினும், ஒரு சில ஆசிரியர்களே வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுத்து இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் கற்பிக்கின்றனர். உயர்தரத்திற்குரிய பாடங்களுக்கு சில ஆசிரியர்கள் Rs5,000 வரை ஒரு பாடத்திற்கு ஒரு மாத கட்டணமாக அறவிடுகின்றனர். மூன்று பாடங்களுக்கும் தனியார் வகுப்பு கட்டணமாக மாத்திரம் Rs 15,000 சில மாணவர்கள் செலவு செய்யவேண்டியுள்ளது. இதை தவிர தொலைபேசி, டேட்டா என்பவற்றுக்கு அவர்கள் செலவு செய்யவேண்டியுள்ளது.
விஞ்ஞானக்கல்வி என்பது தற்போது பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் பெரும்தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.
Leave a Reply